வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார்ச்சாலை பணியை துரிதப்படுத்த கோரிக்கை

வருசநாடு, ஜூன் 29: தேனி மாவட்டம், வருசநாடு முதல் தும்மக்குண்டு, வாலிப்பாறை, வரை சுமார் 10 கிமீ தூர தார்ச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. பொதுமக்களின் தொடர்கோரிக்கையையேற்று 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதியை ஒதுக்கியது. அதன் பின்னர் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது.

ஆனால் இச்சாலையில் குறிப்பிட்ட 5 கிமீ தூர பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி அப்பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அந்த பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், தற்போது வரை சாலை அமைக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் அப்பகுதிகளில் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

இதனால் அந்த வழியாக விளைபொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2 மாதமாக பெய்து வரும் மழையால் இந்த சாலை சேறும், சகதியும் மாறியுள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post வருசநாடு முதல் வாலிப்பாறை வரை தார்ச்சாலை பணியை துரிதப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: