வேலூர் அருகே வினோத திருவிழா சிறுமிகளுக்கு திருமணம் செய்து வழிபாடு: மலை கிராம பெண்கள் மட்டும் பங்கேற்பு, ஆண்கள் வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்

வேலூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இங்கு 100 ஆண்டு பாரம்பரியமிக்க காளியம்மன் கோயில் திருவிழா, கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. அம்மனாக வணங்கப்படும் ஜாலாமரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். கடைசி நாளான நேற்று முன்தினம் பெண்களுக்கு மட்டுமான விழா கொண்டாடப்பட்டது.

இதற்காக அதிகாலை 5 மணிக்கு ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளத்தில் நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கையில் கட்டைகளால் ஆன கத்திகளை ஏந்திக்கொண்டு பாட்டு பாடியபடி கிராமத்திற்கு வந்தனர். 12 மலை கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்தும், பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து 2 சிறுமிகளில் ஒரு சிறுமிக்கு மணமகள் ஆடையும், ஒரு சிறுமிக்கு மணமகன் ஆடையும் உடுத்தி மணக்கோலத்தில் அமரவைத்து திருமணம் செய்வது போல் சடங்குகளை செய்தனர். பின்னர், அவர்களை தெய்வமாக பாவித்து வழிபட்டனர்.

இதையடுத்து ஊர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குலதெய்வம் இருப்பதாக கூறி அங்கு அனைவரும் சென்று திருமண சடங்கு நடத்திய 2 சிறுமிகளையும் அமர வைத்து சுற்றி வந்து கும்மி அடித்து பாட்டு பாடி வழிபட்டனர். தொடர்ந்து, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தாரை தப்பட்டை முழங்க பெண்கள் கிராமத்தை வலம் வந்து வீடு திரும்பினர். இந்த திருவிழாவில் ஆண்கள் பங்கேற்றால் ஓட ஓட விரட்டி அடிப்பதும், எல்லையை தாண்டி வந்தால் ஆண்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மலை கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் ஆண்கள் யாரும் பங்கேற்கவில்லை.

The post வேலூர் அருகே வினோத திருவிழா சிறுமிகளுக்கு திருமணம் செய்து வழிபாடு: மலை கிராம பெண்கள் மட்டும் பங்கேற்பு, ஆண்கள் வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: