கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் வீட்டில் வெடிகுண்டு மூலப்பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு: முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமா?

சிவகங்கை:சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்தன் (30). இவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசனேரி கீழமேடு அருகே சூரக்குளம் ரோட்டில் கண்மாய் பகுதியில் அரவிந்தனுடைய மோட்டார் பம்பு செட்டுடன் கூடிய ஓட்டு வீடு உள்ளது. இங்கு நேற்று காலை திடீரென வெடிகுண்டு வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதில் வீட்டின் மேற்கூரை முழுமையாக சேதமடைந்து ஓடுகள் உடைந்தது. வீட்டு சுவரும் சேதமடைந்தது.

தகவலறிந்து சிவகங்கை நகர் போலீசார் சென்று சோதனை செய்தனர். அங்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை சேகரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடும் வெப்பத்தால் திடீரென வெடி மருந்துகள் வெடித்து சிதறியதில் ஓட்டு வீடு சேதம் அடைந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் யாரையும் கொலை செய்வதற்காக வெடிகுண்டு தயாரிக்க மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருந்தாரா என்ற கோணத்தில் அரவிந்தனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* காவல்நிலையத்தில் பயங்கர சத்தம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல் நிலைய மாடி அறையில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசு, வெடிபொருட்கள் சாக்குகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் 12.30 மணியளவில் மாடி பகுதியில் திடீரென்று பலத்த வெடிச்சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் மாடியில் கிளம்பிய கரும்புகை காவல்நிலைய கீழ் பகுதியையும் சூழ்ந்தது. இதனால் அச்சமடைந்த போலீசார் வெளியே தப்பி ஓடினர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். விசாரணையில், பட்டாசு மூட்டை இறுக்கத்தாலோ அல்லது வெப்பத்தின் தாக்கத்தாலோ வெடித்து, தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.

The post கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் வீட்டில் வெடிகுண்டு மூலப்பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு: முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமா? appeared first on Dinakaran.

Related Stories: