சாராயத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு போதையை கைவிட்டால் வாழ்வாதாரத்துக்கான உதவி: திருத்தணி டிஎஸ்பி வாக்குறுதி

திருத்தணி: சாராயம் உள்ளிட்ட போதை பழக்கங்களை கைவிட்டால் அரசு சார்பில் வாழ்வாதரத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு ஒன்றியம் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நல்லாட்டூர் கிராமத்தில், சாராயம் விற்பனை மற்றும் போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராம பெண்கள், இளைஞர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.

அப்ேபாது டிஎஸ்பி விக்னேஷ் பேசுகையில், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் சிலர் சாராயம், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் குடும்பம் குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். சாராயம் விற்பனை, போதை பொருள் கடத்தல் சம்பாவங்கள் கைவிட்டு வந்தால், அரசின் சார்பில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். மேலும், போதை பொருட்கள் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என விழிப்புணர்வு தரும் வகையில் பேசினார்.

கிராமமக்கள் கூறுகையில், சாராயம், போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் சம்பவங்கள் தடுக்க இரு மாநில போலீசார் எல்லையில் கூட்டு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று எல்லைப் பகுதியில் தமிழ்நாடு – ஆந்திர போலீசார் கூட்டு கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், திருவாலாங்காடு இன்ஸ்பெக்டர், ராஜகோபால் மற்றும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

The post சாராயத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு போதையை கைவிட்டால் வாழ்வாதாரத்துக்கான உதவி: திருத்தணி டிஎஸ்பி வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: