மெட்ரோ குடிநீர் வழங்க துரித நடவடிக்கை: ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ஆவடி: ஆவடி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மெட்ரோ குடிநீருக்கு இணைப்பு வழங்கியும், குடிநீர் வழங்கவில்லை. அந்த பணியை துரிதமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆவடி மாநகராட்சியின், இந்த ஆண்டிற்கான 2வது மாமன்ற கூட்டம் நேற்று காலை 10.30 மணி அளவில், மேயர் ஜி. உதயகுமார் தலைமையில் நடந்தது. இதில், மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது, மா.கம்யூ., 10வது வார்டு உறுப்பினர் ஜான், பேசுகையில், தெருக்களில், 20 வாட் திறன் கொண்ட எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக 40 அல்லது 60 வாட் எல்.இ.டி., விளக்குகள் அமைக்க வேண்டும். மெட்ரோ குடிநீருக்கு இணைப்பு வழங்கியும், குடிநீர் வழங்கவில்லை. அந்த பணியை துரிதமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

48வது வார்டு உறுப்பினர், மகார்த்திக் ரமேஷ், ம.தி.மு.க., பேசுகையில், ஆவடி பருத்திப்பட்டில் உள்ள 1.40 ஏக்கர் ஓ.எஸ்.ஆர். நிலத்தில் வெறும் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் வெறும் பூங்கா மட்டும் அமைக்காமல், உள்விளையாட்டு அரங்கம் அமைக்க மாநகராட்சி பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். 25வது வார்டு உறுப்பினர், மதுரை ஆறுமுகம், அ.தி.மு.க. பேசுகையில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்கு ஏற்கனவே பலர் டெபாசிட் தொகை கட்டியுள்ளனர். ஆனால், மீண்டும் டெபாசிட் தொகை கட்ட மாநகராட்சியில் ‘டிமாண்ட் நோட்டீஸ்’ அனுப்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதற்காக, மாநகராட்சி ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி விளக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு பதில் அளித்து மாநகராட்சி கமிஷனர் பேசுகையில், டெபாசிட் தொகை கட்டியவர்கள், மீதமுள்ள தொகையை கட்டி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு பெறலாம். புதிதாக இணைப்பு பெறுவோர், அவற்றை தவணை முறையில் கட்டி இணைப்பு பெறும் வழிமுறைகள் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி செயல்படுத்தப்படும். இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என பேசினார். மேலும், இதைத்தொடர்ந்து, அனைத்து வார்டுகளிலும் ஆழ்துளை கிணறு, பூங்கா பராமரிப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை என 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மெட்ரோ குடிநீர் வழங்க துரித நடவடிக்கை: ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: