பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது: நம் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி” ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின் பிறந்தநாள்களினை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றுவருகின்றன.

2024ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாத் தொடர்பில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 9ம் தேதி திருவள்ளூர், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல்பரிசு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் கீழ்நிலையில் நடத்தி மாணவர்களைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜூலை 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாப் பேச்சுப் போட்டிகளின் தலைப்புகள் பின்வருமாறு: பள்ளிப் போட்டி – தலைப்புகள் சமூகத் தொண்டில் அம்பேத்கர், அம்பேத்கரும் சுயமரியாதையும், சட்டமேதை அம்பேத்கர். கல்லூரிப் போட்டி – தலைப்புகள் அம்பேத்கரின் சீர்திருத்தச் சிந்தனைகள், அரசியலமைப்பின் சிற்பி, அம்பேத்கர் கண்ட சமத்துவம். பள்ளிப் போட்டி ஜூலை 9ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கும் கல்லூரி போட்டி அன்று பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கப்பெறும்.

The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: