பெரியபாளையம், திருக்கண்டலம் அரசு பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

பெரியபாளையம்: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரியபாளையம், திருக்கண்டலம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் காவல்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரியபாளையம் காவல்துறையினர் மற்றும் ஆதரவு இல்லம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கலந்துகொண்டார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது, 100% போதையில்லா தமிழகத்தை உருவாக்க மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியம், மாணவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பெரியபாளையம் பஜார் வீதி,பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று பொதுமக்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதற்கு முன்னதாக போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து காவலர் ஒருவர் விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தினார். இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத், ஆதரவு இல்லம் நிறுவனர் கோடீஸ்வரன்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எரோமியா அந்தோணி, பெற்றோர் ஆசிரியர் தலைவர் ஏழுமலை, முதல்நிலை காவலர் அருண்குமார், மற்றும் ஆசிரிய பெருமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு உதவி ஆய்வாளர் சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்கள், கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஷாமிலி, மதுவிலக்கு தலைமை எழுத்தர் செல்லமுத்து மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரியபாளையம், திருக்கண்டலம் அரசு பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: