மூன்று ஆண்டுகளாக 195 பேருக்கு நில பட்டா கிடைக்காததால் வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் வல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்ட மந்திரி, வல்லூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 280 பேருக்கு, ஒன்றிய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.ஒய்) என்ற அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மேற்கண்ட இரு கிராமங்களைச் சேர்ந்த 195 பேருக்கு நில பட்டா இல்லாததால் ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்று வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் தொடர்ந்து நிலப்பட்டா வழங்க கோரி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பட்டா கோரி மனு அளித்தனர்.

அதன் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட கலெக்டர் வரை புகார் தெரிவித்தும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும், வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சமரச பேச்சுவார்த்தையில் வருவாய் அதிகாரிகளிடம் ஈடுபட வந்தனர்.

அவர்களிடம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் வருவாய் தீர்வாயத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீதே நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக செயல்படும் நீங்கள் எப்படி? மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள் என காரசாரமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயத்தில் மீண்டும் மனு அளிக்கும் மாறும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் நிலப்பட்டா கோரி மனு அளித்துள்ள கிராம மக்கள் இதே நிலை தொடர்ந்தால் அரசுக்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

The post மூன்று ஆண்டுகளாக 195 பேருக்கு நில பட்டா கிடைக்காததால் வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: