அம்பத்தூர் ஓடி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அம்பத்தூர் எம்எல்ஏ ேஜாசப் சாமுவேல் (திமுக) பேசியதாவது: விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கனவைக் கொண்டு அலைகின்ற கிராமத்து இளைஞர்களுக்கு கலைஞரின் பெயரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம், கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் ஊக்குவிக்கப்படுகிறது. சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் தலா ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படுவதன் மூலம் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு வீரர்கள் உருவாக்குவதற்கு வழிவகை செய்துள்ளது.

பழமையான விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் உயர்த்தி, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.11.34 கோடி மதிப்பீட்டிலும், ஜவஹர்கலால் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலும், ஜவஹர்கலால் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலும் நிதி வழங்கி, அரசாணை பிறப்பிப்பதற்கு சென்னை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் அளித்தவுடன், புலி புகுந்த குகை போல, எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விளையாட்டுத் துறை பாய்ச்சலில் நிற்கிறது. எந்த மாநிலத்தோடு ஒப்பிட்டாலும், தமிழ்நாடு அந்த மாநிலத்திற்கு சலித்தது இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளையும் நடத்தி, விளையாட்டு போட்டியின் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றி காட்டுகின்றது இந்த திராவிட மாடல் அரசு.

தமிழ்ப் புதல்வன் திட்டம், பெண்கள் கல்வி கற்பதற்கு மட்டும்தான் உதவியா, ஏன் ஆண்களுக்கு கிடையாதா என்று மாணவச் செல்வங்களின் உயர்கல்விக்கும் மாதந்தோறும் ரூ.1,000 விரைவில் வழங்கவுள்ளார். புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலமாக உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அம்பத்தூர் ஓடி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்துத்தர வேண்டும். அம்பத்தூர் பகுதி முழுவதிலும் உள்ள உயரழுத்த மேல்நிலை மின்கம்பிகளை புதைவிடமாக மாற்றியமைத்துத் தர வேண்டும்.

அம்பத்தூர், வார்டு 8ல் உள்ள மாதனாங்குப்பம் மற்றும் வார்டுகள் 79 முதல் 86 வரையுள்ள விடுபட்ட தெருக்களில் பாதாளச் சாக்கடை பணிகளை விரைவில் செயல்படுத்த வேண்டும். சென்னை பாடி-அம்பத்தூர் ஓடி வரை சிடிஎச் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். அம்பத்தூர் பகுதியிலுள்ள டன்லப் தொழிற்சாலைக்கு அரசினால் வழங்கப்பட்ட 6 ஏக்கர் நிலம் கொண்ட விளையாட்டு மைதானத்தை அரசே திரும்பப் பெற்றுக்கொண்டு, அம்பத்தூர் தொகுதிக்கு சிறப்பான விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும். கொரட்டூர் ஏரியை தூர்வாரி கரையைப் பலப்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அம்பத்தூர் ஓடி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: