பெரியகுளத்தில் நிறுவன பங்களிப்பு நிதியில் கண்மாய் தூர்வாரும் பணி

பெரியகுளம், ஜூன் 26: நிறுவன பங்களிப்பு நிதியின் கீழ் பெரியகுளத்தில் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. முதன்முறையாக பொது பயன்பாட்டிற்காக நிறுவன பங்களிப்பு நிதி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயை முழுவதிலும் புதிய வகை தாவரங்கள் ஆக்கிரமித்து மாசடையும் நிலை ஏற்பட்டது.

மேலும் மீன் வளர்ப்பும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்சுமிபுரம் கண்மாயை ஆக்கிரமித்துள்ள தாவரங்களை அப்புறப்படுத்தி, கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் தெரிவித்தார். கண்மாயில் ஆக்கிரமித்திருந்த தாவரங்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கண்மாயில் உள்ள நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கண்மாயில் நீர் வற்றி வரும் நிலையில், ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு கண்மாயில் ஆக்கிரமித்திருந்த தாவரங்களை அகற்றுவதோடு, கண்மாயை தூர் வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் கோட்டாட்சியர் முத்து மாதவன் கூறுகையில், “

பெரிய தொழில் நிறுவனங்கள், வருவாயில் இரண்டு சதவீதம் நிதியை பொது காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, 2014ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள் சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் முதல் முறையாக லட்சுமிபுரம் கண்மாய் முழுவதும் ஆக்கிரமித்திருந்த தாவரங்கள் அப்புறப்படுத்துவதுடன், கண்மாயை தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

The post பெரியகுளத்தில் நிறுவன பங்களிப்பு நிதியில் கண்மாய் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Related Stories: