பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ20 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரம்: பழைய தரைப்பாலம் முற்றிலும் அகற்றம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் ஆரணியாற்றில் பழைய தரைப்பாலம் முற்றிலும் அகற்றப்பட்டு ரூ20 கோடியில் புதிய பாலத்திற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெரியபாளையம் அருகே உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் புதுப்பாளையம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக ஆரணிக்குச் சென்று, அங்கிருந்து கும்மிடிபூண்டி, கவரைபேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். மேலும் பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, சென்னை ஆகிய பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மழை காலத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்குச் சென்று பழவேற்காடு கடலில் கலப்பது வழக்கம். அவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கிவிடும். மேலும், தண்ணீர் அதிகமாக வந்தால் இந்த கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பெரியபாளையம் சென்று அங்கிருந்துதான் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும். இதுகுறித்து புதுப்பாளையம் கிராமத்திற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என 10 கிராம மக்கள் கடந்த வருடம் கோரிக்கை வைத்தனர்.

இதையறிந்த அப்போதைய அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ், கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் ஆய்வு செய்து ரூ20 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பாலம் கட்டுமானப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் தரைப்பாலத்தின் அருகில் கிராம மக்கள் செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பழைய தரைப்பாலம் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முற்றிலுமாக பழைய பாலம் அகற்றப்பட்ட நிலையில் புதிய பாலம் கட்டுமான பணிகள் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

The post பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ20 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரம்: பழைய தரைப்பாலம் முற்றிலும் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: