இரு மாநிலங்களை இணைக்கும் திருத்தணி – சித்தூர் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்த வேண்டும்: பேரவையில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

திருத்தணி: சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மானியக்கோரிக்கையின் போது திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் (திமுக) பேசியதாவது:  திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு புதிய பேருந்து நிலையம், மானியக் கோரிக்கையில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு திருவுருவச் சிலை அமைப்பதற்கு அனுமதி, தலைமை மருத்துவமனை, பள்ளிக் கட்டடங்கள், கிராமச் சாலைகள், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ள முதல்வருக்கும், துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதைப்போல, ஒரு நாட்டினுடைய வளர்ச்சியைப் பொறுத்தவரையில், அந்த நாட்டில் எந்தளவிற்கு சாலை வளர்ச்சிகள் இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், அந்தச் சாலை வளர்ச்சியை பொறுத்துதான் ஒரு நாட்டினுடைய பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகள் நிறைவேறுகின்றன. திருத்தணி முதல் சித்தூர் செல்லும் இரு மாநிலங்களை இணைக்கும் சாலையை இருவழிச் சாலையிலிருந்து 4 வழிச் சாலையாக அகலப்படுத்திட வேண்டும். இரா.கி.பேட்டை நெடுஞ்சாலை, ராஜாநகர் நெடுஞ்சாலை, சிவாடா நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைத்திட வேண்டும்.

திருத்தணி-அரக்கோணம் சாலை மற்றும் சித்தூர் சாலையை இணைக்கும் வகையில் முக்கிய மாவட்ட சாலைகளாக தரமுயர்த்தி அகலப்படுத்திட வேண்டும். திருத்தணி சுரங்கப்பாதை மற்றும் சித்தூர் சாலை அணுகுசாலை சந்திப்பு மற்றும் திருத்தணி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகிலுள்ள மா.பொ.சி. சாலை சந்திப்பை மேம்படுத்திட வேண்டும். திருத்தணி ஒன்றியம், சிறுகுமி சாலையை ஒருவழித் தடத்திலிருந்து இருவழித் தடமாக அகலப்படுத்த வேண்டும். பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும். திருத்தணியை சுற்றி ரிங் ரோடு அமைத்திடவும், திருத்தணி நகரத்தில் ரயில்வே இருப்புப் பாதை வழியாக மினி சுரங்கபாதை அமைத்திட வேண்டும்.

இரா.கி. பேட்டை முதல் சித்தூர் செல்லும் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றித் தர வேண்டும். அம்மையார்குப்பத்திற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இரா.கி.பேட்டை-பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு-நகரி, நகரி-பள்ளிப்பட்டு சாலை, இரா.கி. பேட்டை- ஸ்ரீகாளிகாபுரம் சாலை, இரா.கி. பேட்டை-சித்தூர் சாலை, இரா.கி. பேட்டை-திருத்தணி- சித்தூர் சாலை-காளிகாபுரம் வழி, ஆர்.கே. பேட்டை-அத்திமாஞ்சேரிபட்டு உள்ளிட்ட சாலைகளை மேம்படுத்தித் தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

எல்லா மாநிலங்களும் தமிழ்நாட்டை நோக்கி நகர்கின்றன
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போல, தமிழக அரசின் எல்லா திட்டங்களையும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்ற தொடங்கியுள்ளன. எல்லா சாலைகளும் ரோம் நோக்கி செல்கின்றன என்பதுபோல, இந்தியாவின் எல்லா மாநிலங்களும் தமிழ்நாட்டை நோக்கி முதல்வரின் திட்டங்களால் நகர்கின்றன. அதன் பலன்தான் 40க்கு 40 என்ற தேர்தல் வெற்றி. களத்திலே மக்கள் எழுச்சியைக் கண்டோம். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ4,000 கோடியில் 10,000 கி.மீ. சாலை மேம்படுத்தப்படும். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் பேரவையில் பேசினார்.

The post இரு மாநிலங்களை இணைக்கும் திருத்தணி – சித்தூர் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்த வேண்டும்: பேரவையில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: