தில்லைவிளாகம் அரசு பள்ளியில் 11, 12ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தாததால் பெற்றோர் விரக்தி

*டிசி கேட்டு பள்ளிக்கு படையெடுப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் இப்பகுதி கிராமம் மட்டுமின்றி சுற்று பகுதி கிராமத்தை சேர்ந்த ஏழைஎளிய மக்கள் விவசாய கூலித்தொழிலாளர்கள் மீனவர்கள் ஆகியோரின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள நிலையில் மொத்தம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பொதுவாக 15ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது தலைமையாசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பள்ளி பிடிஏ மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்ய கூடாது என்று அறிவுறுத்தியதால் அதற்கும் வழியில்லாமல் உள்ளது.

இந்தநிலையில் இந்தாண்டு பள்ளி திறந்து நடந்து வரும் நிலையில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இன்னும் ஆசிரியர்கள் நியமனம் செய்து பாடம் துவங்காததால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சும்மா அமர்ந்துவிட்டு சென்று வருகின்றனர். அதனால் மாணவர்கள் தங்களின் கல்வி தரம் கேள்விக்குறியாக உள்ளதால் பெற்றோர்களிடம் நாங்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் பள்ளி வந்து மாணவர்களை நாங்கள் வேறு ஊர் பள்ளியில் அல்லது தனியார் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம் என தினமும் டிசியை கேட்டு வந்து செல்கின்றனர். பெற்றோர்களிடம் இரண்டொரு நாளில் ஆசிரியர்கள் நியமனம் செய்து விடுவார்கள் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறி அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.கடந்த கல்வி ஆண்டில் (2022-2023) தில்லைவிளாகம் அ.மே.பள்ளி 12ம் வகுப்பில் 100மூ தேர்ச்சி பெற்று திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றது, ஆனால் இந்த கல்வியாண்டில் (2023-2024) 12-ஆம் வகுப்பில் நிரந்தர ஆசிரியர் ஒருவர் கூட இல்லாத காரணத்தினால் தேர்ச்சி விகிதம் 74க்கு கீழ் குறைந்துள்ளது.

மேலும் 10ம் வகுப்பில் கணினி ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது. இதன் காரணமாக மணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்கப் போவதாக கூறுகின்றனர். இந்தாண்டு சேர்க்கை விகிதத்தையும் பாதிக்கும் நிலை உள்ளது. ஆகையில் தாங்கள் கவனத்திற்கு கொண்டு சென்று ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப ஆவண செய்யுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விரைவில் நடைபெற இருக்கும் பொது கலந்தாய்வுக்கு பின்னர் இங்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.இருந்தும் இன்னும் கல்வி கல்விதுறை சார்பில் முறையான தகவல் இல்லாததால் நிரந்தர ஆசிரியருக்கு பதிலாவது வேறு பள்ளியில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களையாவது இங்கு நியமனம் செய்து இந்தாண்டு வகுப்பை துவக்க வேண்டும் இதில் காலதாமதம் ஏற்பட்டால் பெற்றோர்களை ஒன்று திரட்டி அரசின் கவனத்தை திசை திரும்பும் வகையில் போராட்டம் நடத்துவோம் என பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

The post தில்லைவிளாகம் அரசு பள்ளியில் 11, 12ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தாததால் பெற்றோர் விரக்தி appeared first on Dinakaran.

Related Stories: