தர்மபுரி, ஜூன் 24: தர்மபுரி மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டிற்கு 922 டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை 94.80 டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மில்லி மீட்டர் ஆகும். இதுவரை 254.64 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இம்மாவட்டத்தில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2.10 லட்சம்.
இதில், சிறு, குறு விவசாயிகள் எண்ணிக்கை 1.90 லட்சம். தர்மபுரி மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விவசாயம் விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 43 ஆயிரத்து 741 ஹெக்டரில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 843 ஹெக்டர் சாகுபடி பரப்பாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பாலும் ராகி மற்றும் பயறு வகை பயிர்கள், மானாவாரி நிலங்களில் பயிரிடுகின்றனர். விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்தப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.
இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால் வேளாண் உற்பத்தியில், தர்மபுரி மாவட்டம் எப்போதுமே முன்னோடி மாவட்டங்களுள் ஒன்றாக உள்ளது. விவசாய உற்பத்தியை உயர்த்தவேண்டி பல வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்தி, அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும், அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர் கொள்கிறது.
விவசாயிகளுக்கு நல்ல வருவாயும் விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில் நுட்பங்களுடன், கூடுதலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், நீடித்த நிலையான தேசிய இயக்கம், முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நீடித்த நிலையான பருத்தி இயக்கம், நுண்ணீர் பாசனம் மூலமாக நீர் மேலாண்மை பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள் இயற்கை உர வேளாண்மை ஒருங்கிணைந்த சத்து மேளாண்மை மேற்கொள்ளல் மூலம் மண் வளமேம்பாடு, நீடித்த நிலையான கரும்பு இயக்கம், ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை ,இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பயிர் இழப்பீட்டினை ஈடு செய்ய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும், விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில், தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு வேளாண்மை உழவர் நலத் துறையில் 2024 -2025ம் ஆண்டிற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், தற்போது வரை 7,654 ஹெக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, இந்த 2024- 2025ம் ஆண்டிற்கு 922 டன் விதை நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் வரை 94.80 மெட்ரிக் டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.
The post நடப்பாண்டில் 922 டன் விதைகள் வழங்க இலக்கு appeared first on Dinakaran.