புழல் அருகே உலக போதை ஒழிப்பு தின மாரத்தான் ஓட்டம்: எம்பி பரிசு வழங்கினார்

 

புழல், ஜூன் 24: புழல் அருகே உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. உலக குடிபோதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புழல் அடுத்த லட்சுமிபுரம் ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு தின மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி தலைமை தாங்கினார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணி அமைப்பின் தலைமை கண்காணிப்பாளர் ஜிகேந்திரன் ராஜன், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் அருணன், காமராஜர் அறக்கட்டளை நிறுவனர் தங்கமுத்து, ரெட்டேரி தனியார் மருத்துவமனை நிறுவனர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 7.5 கி.மீட்டர் தூரம் கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலாநிதி வீராசாமி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 6 முதல் 40 வயது வரையிலான சிறுவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ரெட்டேரி மாதவரம் ரவுண்டானா கதிர்வேடு, கல்பாளையம், விநாயகபுரம் பகுதிகள் வழியாக மாரத்தான் நடைபெற்றது. இதில் முதலாவதாக வந்த சிறுவர் சிறுமிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பெரியோர்களுக்கு நினைவுப் பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் கலாநிதி வீராசாமி எம்பி சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, கலாநிதி வீராசாமி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், போதை பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை மட்டும் போதாது, பொதுமக்களும் உறுதுணையாக இருந்து போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார்.

The post புழல் அருகே உலக போதை ஒழிப்பு தின மாரத்தான் ஓட்டம்: எம்பி பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: