திருவள்ளூரில் ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

 

திருவள்ளூர், ஜூன் 24: திருவள்ளூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர்கள் மகாலட்சுமி, மோகனா, ஓய்வு பிரிவு செயலாளர் ஸ்டீபன் சற்குணம், மாவட்ட துணை செயலாளர் வில்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் லோகையா அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் இயக்க எழுச்சி உரையாற்றினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று எம்மிஸ் பணிகள் செய்ய சுமார் 8 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் செய்த முதலமைச்சருக்கு நன்றியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக சிபிஎஸ் ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஜூலை இறுதி வாரத்தில் நடைபெற உள்ள கோரிக்கை மாநாட்டிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு வரவேண்டும் என்றார். இதில் நிர்வாகிகள் பள்ளிப்பட்டு ரமேஷ், ரமணய்யா, திருவாலங்காடு மோகன் குமார், திருத்தணி தனஞ்செயன், திருவள்ளூர் பாலுமகேந்திரன், பிரசன்னா, கபிரியேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவள்ளூரில் ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: