அனல் பறக்கும் அரசியல் சூழலுக்கு மத்தியில் மக்களவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்பு; 26ல் சபாநாயகர் தேர்வு; 27ல் ஜனாதிபதி உரை

புதுடெல்லி: நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள், அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் என அனல் பறக்கும் அரசியல் சூழலுக்கு மத்தியில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். நாளை மறுதினம் சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் 27ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார்.

நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைத்தது. தனிப்பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை என்ற நிலையில், பாஜவுக்கு இம்முறை 240 எம்பிக்கள் உள்ளனர். 234 எம்பிக்களுடன் இந்தியா கூட்டணி பலமான எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 99 எம்பிக்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்க உள்ளது. மாநிலங்களவை வரும் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடக்கும். மக்களவையில் இன்றும், நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். இதில், திமுக கூட்டணியின் 40 எம்பிக்களும் நாளை பகல் 1 மணி முதல் 3 மணி வரை பதவியேற்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து நாளை மறுதினம் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். வரும் 27ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பிரதமரின் பதில் உரையும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கும். கடந்த 2 ஆட்சியிலும் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் இருந்த நிலையில் இம்முறை எதிர்க்கட்சிகள் கூடுதல் பலம் பெற்றிருப்பதால் அரசுக்கு கடும் சவாலுடனே மக்களவை தொடங்குகிறது.

ஏற்கனவே, இடைக்கால சபாநாயகராக பாஜவின் 7 முறை எம்பியான பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டதில் ஒன்றிய அரசுக்கும் காங்கிரசுக்கும் மோதல் நிலவி வருகிறது. அதே சமயம் மக்களவை சபாநாயகராக யார் நியமிக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு விட்டுக் கொடுத்தால் கருத்தொற்றுமை அடிப்படையில் சபாநாயகரை தேர்வு செய்து கொள்ளலாம் என இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆனால், பாஜவைப் பொறுத்த வரையில், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பலம் இல்லாததால், சபாநாயகர், துணை சபாநாயகர் இரண்டையுமே தன்வசம் வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதற்கேற்றார் போல், பாஜ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 2 கட்சிகளுமே சபாநாயகர் பதவி வேண்டாம் என கூறி உள்ளன. எனவே சபாநாயகராக மீண்டும் ஓம்பிர்லா நியமிக்கப்படலாம் என்றும் துணை சபாநாயகர் பதவி பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு தரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், துணை சபாநாயகர் பதவியை விட்டுத்தராத பட்சத்தில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது. எனவே சபாநாயகர், துணை சபாநாயகர் இரு பதவிகளுமே தேர்தல் மூலம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது நீட் முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய 3 குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் ரயில் விபத்துகள் என அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் இருப்பதால், புதிய ஆட்சியின் முதல் கூட்டத்தொடரில் கடும் அமளிகளுடன் ஆரம்பிக்கும் என தெரிகிறது.

* மக்களவையில் பிரதமர் மோடி, அவரது அமைச்சர்கள் உட்பட 280 புதிய எம்பிக்கள் இன்றும், மீதமுள்ள 264 எம்பிக்கள் நாளையும் பதவியேற்க உள்ளனர்.

* காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும், முதல் நபராக பிரதமர் மோடி பொறுப்பேற்பார்.

* வரும் 27ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார். அடுத்த நாள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதற்கு பிரதமர் மோடி வரும் ஜூலை 2 அல்லது 3ம் தேதி பதிலளித்து பேசுவார்.

The post அனல் பறக்கும் அரசியல் சூழலுக்கு மத்தியில் மக்களவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்பு; 26ல் சபாநாயகர் தேர்வு; 27ல் ஜனாதிபதி உரை appeared first on Dinakaran.

Related Stories: