வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பில் 77 புதிய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பில் 77 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாக வருவாய்த்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல், அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கென 2021-22 ஆண்டில் 96.10 லட்சம் ரூபாய் செலவில் 8 புதிய வாகனங்களும், 2022-23 ஆண்டில் 2.48 கோடி ரூபாய் செலவில் 14 புதிய வாகனங்களும், 2023-24 ஆண்டில் 2.15 கோடி ரூபாய் செலவில் 10 புதிய வாகனங்களும் 2024-25 ஆண்டில் 61.46 லட்சம் ரூபாய் செலவில் 3 புதிய வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வருவாய்த் துறை அலுவலர்கள் தங்கள் பணியை செம்மையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில், வருவாய்த் துறையில் பணிபுரியும் 34 துணை ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் மற்றும் 80 வட்டாட்சியர்களின் பயன்பாட்டிற்காக 114 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் முதற்கட்டமாக தமிழ்நாடு முதல்வர் நேற்றையதினம் 77 புதிய வாகனங்களை 26 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை 3 அலுவலர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ராஜாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பில் 77 புதிய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: