பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்

 

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததின் பேரில், தென்காசி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன.

இருப்பினும் மேம்பாலம் பணி நடைபெறும் இடத்தில் சாலையின் இருபுறமும் தார்சாலை அமைக்கப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் இச்சாலையில் செல்லும் போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே துரித நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் சர்வீஸ் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: