தங்கையை காதலித்ததால் அதிமுக நிர்வாகியின் மகனை கொன்று எரித்த சகோதரர்: கும்பகோணம் அருகே பரபரப்பு

கும்பகோணம்: தங்கையை காதலித்ததால் அதிமுக நிர்வாகியின் மகனை கழுத்தறுத்து கொன்று உடலை எரித்த அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, அய்யாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தம்பிதுரை. அதிமுக கிளை செயலாளர். இவரது மகன் கோகுல் (25). கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 12ம் தேதி மருந்தகத்திற்கு இரவு நேர பணிக்கு சென்றுள்ளார்.

மறுநாள் அவர் வீட்டுக்கு வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் சோழபுரம் காவல்நிலையத்தில் 13ம் தேதி இரவு கோகுலின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து கோகுலை தேடி வந்தனர்.  இந்நிலையில் கோகுலின் செல்போன் அழைப்பை ஆய்வு செய்ததில் கடைசியாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் கஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (20) மற்றும் அரியலூர் மாவட்டம், மெய்க்காவல் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ்ராஜ் (18) ஆகியோரிடம் பேசியது தெரியவந்தது.

அவர்களை தொடர்பு கொண்ட போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த இருவரையும் பிடித்து, நேற்று சோழபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், கோகுலை கோவிலாச்சேரி ஊராட்சி, பழவாற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டில் கழுத்தறுத்து கொலை செய்து கரையோர நாணல் புதரில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சோழபுரம் போலீசார் மற்றும் தஞ்சாவூர் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சுடுகாட்டிலிருந்து கோகுல் உடலை கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நெருங்கிய நண்பர் பிரேம்குமாரின் சகோதரியை கோகுல் காதலித்துள்ளார். இதற்கு பிரேம்குமார், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகாஷ்ராஜ் ஆகியோர் சேர்ந்து கோகுலை கடத்தி சென்று கொன்று எரித்துள்ளது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்துள்ளோம் என்றனர்.

The post தங்கையை காதலித்ததால் அதிமுக நிர்வாகியின் மகனை கொன்று எரித்த சகோதரர்: கும்பகோணம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: