நகை, பணம் கொள்ளை அடித்த விவகாரத்தில் நகை கடையை வேவு பார்த்தவர் கைது

ஆவடி: நகைக்கடை கொள்ளை வழக்கில் வேவு பார்த்து இந்த கொள்ளை நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த கடைசி நபரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ்(33). வீட்டின் கீழ்த்தளத்தில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 15ம் தேதி, இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் பிரகாஷை மிரட்டி, 2.5 கிலோ தங்க நகை, வெள்ளி நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, ஆவடி முத்தபுதுப்பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து, 8 தனிப்படை அமைத்து, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், ஷீட்டான் ராம், அசோக் குமார், சுரேஷ் மற்றும் பஜன்லால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து, 1 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.70,000 பணம் மற்றும் 2 ஐ போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போராராம்(42) என்பவரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 238 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை மாங்காட்டில் தங்கி நகை கடையில் கொள்ளை அடிப்பதற்காக, வேவு பார்த்து உதவியதாக தெரிய வந்தது. இந்த கொள்ளையில் தேடப்பட்டு வந்த கடைசி நபரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்கப்பட்டார்.

The post நகை, பணம் கொள்ளை அடித்த விவகாரத்தில் நகை கடையை வேவு பார்த்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: