புதுகை அருகே மணல் லாரி ஏற்றி ஆர்டிஓவை கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி கைது

விராலிமலை: புதுகை அருகே வாகன சோதனையில் மணல் லாரியை ஏற்றி ஆர்டிஓவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகியை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த கிளிக்குடி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 13ம்தேதி இரவு இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி, அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் தனியார் காரில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

கிளிக்குடி ஊராட்சி பகுதியில் வளையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஆற்றுமணல் ஏற்றி அதிவேகமாக வந்த டாடா 407 லாரியை ஆர்டிஓ தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது டிரைவர் சங்கர், லாரியை நிறுத்தாமல் ஆர்டிஓ கார் மீது மோதியதோடு, லாரியை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் டிரைவர் கனக பாண்டியன் சுதாரித்து இடதுபுறமாக திருப்பிய போது கார் மீது லாரி மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டதால் லாரியை அங்கேயே விட்டு விட்டு டிரைவர் சங்கர் தப்பியோடினார். இதுதொடர்பாக ஆர்டிஓ கார் டிரைவர் கனகபாண்டியன் புகாரின்படி அன்னவாசல் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கவிநாரிபட்டியை சேர்ந்த சங்கர் மற்றும் லாரி உரிமையாளரான அதிமுக ஓட்டுநர் அணி நிர்வாகி சுந்தரம் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அன்னவாசல் போலீசார் இலுப்பூர்-விராலிமலை சாலை மேட்டுப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூ வீலரில் பின்னால் அமர்ந்து சென்ற சங்கரை பிடித்து கைது செய்தனர். தலைமறைவாக இருந்த லாரி உரிமையாளரான அதிமுக நிர்வாகி சுந்தரத்தை பரம்பூர் அடுத்த சொக்கம்பட்டியில் பதுங்கி இருந்த சுந்தரத்தை நேற்று மாலை கைது செய்தனர்.

The post புதுகை அருகே மணல் லாரி ஏற்றி ஆர்டிஓவை கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: