ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்து காய்கறி விற்பதுபோல் நடித்து கஞ்சா விற்ற தம்பதி கைது: 10 கிலோ பறிமுதல், மேலும் இருவருக்கு வலை

பெரம்பூர்: ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி காய்கறி விற்பதுபோல் நடித்து, வீடு மற்றும் வாகனத்தில் வைத்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவியை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று ஓட்டேரி மங்களபுரம், ஆதி கேசவன் நகர் 4வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் பண்டல் பண்டலாக சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த சதீஷ் என்ற செக்யூரிட்டி சதீஷ் (32) மற்றும் அவரது மனைவி அலமேலு (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான மினிவேன் ஒன்றில் காய்கறி வியாபாரம் செய்துள்ளனர்.

அவ்வாறு காய்கறி வியாபாரம் செய்யும்போது கஞ்சா வியாபாரத்தையும் சேர்த்து செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் கூறிய குறிப்பிட்ட அந்த மினி வேனை சோதனை செய்தபோது, அதிலிருந்து மேலும் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சதீஷின் தம்பி அருண் என்பவர் கேரளாவில் வசித்து வருகிறார். அவருக்கு நன்கு தெரிந்த நபர்கள் விசாகப்பட்டினத்தில் கஞ்சா விற்பனை செய்கின்றனர்.

எனவே அருண் மூலமாக சதீஷ் பணத்தை அனுப்பி விசாகப்பட்டினத்தில் இருந்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அருள் என்பவர் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து ஓட்டேரி பகுதியில் தனக்கு தெரிந்த நபர்களிடம் விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கணவன் மனைவியான சதீஷ் மற்றும் அலமேலு ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் கஞ்சா வாங்க உதவியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த அருண் மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அருள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்து காய்கறி விற்பதுபோல் நடித்து கஞ்சா விற்ற தம்பதி கைது: 10 கிலோ பறிமுதல், மேலும் இருவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: