திருச்சி, திருவண்ணாமலை, கல்வராயன் பகுதியில் சோதனை:  460 லிட்டர் சாராயத்துடன் 17 பேர் கைது;  தமிழகம் முழுவதும் வேட்டை

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 43 பேர் பலியானதையடுத்த மாநிலம் முழுவதும் மலைப்பிரதேச பகுதியில் சாராய வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் இருக்கும் கல்வராயன் மலைப்பகுதியில் தான் சிலர் இன்னும் சாராயம் காய்ச்சுவதாகவும், அங்கிருந்து தான் சேலம் மாவட்டம் தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, ஆத்தூர், கருமந்துறை, வாழப்பாடி பகுதிக்கு சப்ளையாகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் தீவிர சாராய வேட்டை நடத்த எஸ்பி அருண்கபிலன் உத்தரவிட்டார்.

ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் 50 போலீசார் கொண்ட தனிப்படையினர் நேற்று அதிகாலை முதல் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். மேலும், ஆத்தூர் ரூரல், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, கரியகோயில், ஏத்தாப்பூர், வாழப்பாடி பகுதியில் சோதனை நடத்தினர். இதில் தலைவாசல் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த கலியமூர்த்தி (50) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 60 பாக்கெட் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஆத்தூர் சிறுவாச்சூர், கரியகோயில் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட குன்னூர் கிராங்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் (25), சிறுவாச்சூரை சேர்ந்த ராமசாமி (58) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார், தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெட்டவேலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராய ஊறல் போட்டுள்ளதாக மாவட்ட காவல் உதவி எண் 9487464651 மூலம் ரகசிய தகவல் வந்தது.

எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் நெட்டவேலம்பட்டியை சேர்ந்த முத்துசாமி (50) என்பவரது விவசாய தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த 250லிட்டர் சாராய ஊறல் மற்றும் 6 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அங்கேயே அழித்தனர். இதையடுத்து முத்துசாமி கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த அதிரடி சோதனையில் 7 பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 340 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வேட்டவலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதியிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஜவ்வாதுமலை பகுதியில் 700 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனாப்பள்ளி அருகே மலையடிவாரத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பார்சனா பள்ளியைச் சேர்ந்த பரந்தாமன்(55) என்பவரை கைது செய்து, 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் தீவிர சாராய வேட்டை நடத்தப்படுகிறது.

* பைக்கில் சாராய பாக்கெட்டுகளை டோர் டெலிவரி செய்தவர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் அருகே ராமசேசபுரத்தில் பைக்கில் டோர் டெலிவரியாக வாலிபர் ஒருவர் பாக்கெட் சாராயம் விற்பது போன்ற வீடியோ கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது. அப்போது மாவட்ட எஸ்பி அருண்கபிலன் உத்தரவின்பேரில், தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஏப்ரல் 17ம் தேதி ராமசேசபுரத்தை சேர்ந்த சிவசந்திரன் என்பவர் தனது பைக்கில் வந்து பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று, கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டநிலையில், அந்த பழைய வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் வைலானது. ஆனால், சில தொலைகாட்சிகளில் ஆத்தூரில் நேற்றைய தினம் பைக்கில் வந்து சாராயம் டோர் டெலிவரி செய்கிறார்கள் என்று வெளியானது. இதனால், சேலம் மாவட்டமே பரபரப்பானது. எஸ்பி அருண்கபிலன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிலர் வேண்டுமென்றே பழைய வீடியோவை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து ஒன்றரை மாதத்துக்குப்பின் தனிப்படை போலீசார் நேற்று மாலை அதிரடியாக சிவசந்திரனை (35) கைது செய்தனர்.

The post திருச்சி, திருவண்ணாமலை, கல்வராயன் பகுதியில் சோதனை:  460 லிட்டர் சாராயத்துடன் 17 பேர் கைது;  தமிழகம் முழுவதும் வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: