மெட்ரோ ரயில் பணிக்கு வைத்திருந்த 7 டன் இரும்பு திருடிய இருவர் கைது

வேளச்சேரி: மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக வைத்திருந்த 7 டன் இரும்பு தளவாடப் பொருட்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். மாதவரத்தில் இருந்து சிறுசேரி வரை மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வேளச்சேரி பிரதான சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, பெரும்பாக்கம் பிரதா சாலை ஆகிய இடங்களில் கடந்த 3 மாதங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு இரும்பு கம்பிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் பணி நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேடவாக்கத்தில் வைத்திருந்த இரும்பு தளவாட பொருட்களை, மர்ம நபர்கள் திருடி, அவற்றை லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பதாக மேடவாக்கம் மெட்ரோ ரயில் பணி உதவியாளர் சரவணகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர், பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புறப்பட தயாராக நின்றிருந்த லாரியை மடக்கினர். லாரியில் இருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மெட்ரோ ரயில் பணியில் ஏற்கனவே வேலை செய்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த காதல் அலிகான் (38), பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் (34) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 டன் இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மெட்ரோ ரயில் பணிக்கு வைத்திருந்த 7 டன் இரும்பு திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: