புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

 

புதுக்கோட்டை, ஜூன் 11: புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார். கோடை விடுமுறை முடிந்து நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையொட்டி புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) சண்முகம் தலைமை தாங்கி பள்ளி வளாகத்தில் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து 2024-2025ம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கையினை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்களை வழங்கி கல்வி ஆண்டு சிறக்கவும், மாணவர்கள் சிறப்பாக கல்வி பயிலவும் வாழ்த்தினார். பின்னர் உலகச் சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அனைவரும் சுற்றுச்சூழல் உறுதி மொழி மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கல்வி) செந்தில், உதவித்திட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) கோவிந்தன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நைனாமுகமது, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் தலைமையாசிரியை (பொ) விஜி நன்றி கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிகள் திறந்த நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: