3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

 

நாமக்கல், மே 29: நாமக்கல் பகுதியில், 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் 3 நாட்கள் 2 மில்லி மீட்டர் முதல் 8 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், ஈக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

இதனால் கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகி உள்ளது. கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறைகளை கையாளுவது மிகவும் சிறந்ததாகும். கோழிப் பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க, பழுதடைந்த நிப்பிள்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: