சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

நாமக்கல், ஜூன் 24: கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கையாக 4 நாளில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளகுறிச்சியில் விஷசாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எஸ்பி ராஜேஸ்கண்ணன், மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுபவர்கள், டாஸ்மாக் மதுபானங்களை சந்து கடைகளில் விற்பனை செய்பவர்களை கைது செய்து சிறையிலடைக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, கடந்த 4 நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கள்ளசாராய விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனையை முற்றிலுமாக ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 4 நாட்களாக போலீசார் கள்ளசாராய வேட்டையில் ஈடுபட்டனர். மலைப்பகுதி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரம் நடத்தப்பட்ட சோதனையில், கள்ளசாராயம் விற்பனை எதுவும் மாவட்டத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுபானங்களை சட்டவிரோதமாக சந்துகடைகள், ஓட்டல்களில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் இது போன்ற சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற வழக்குளில் கைதாகும் நபர்கள் யாரும் இனி மேல் காவல்நிலைய பெயிலில் விட முடியாது. மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் இது தொடர்பான உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளசாராயம், சட்டவிரோத மதுபான விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தாலுகா வாரியாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை 2 தாலுகாவில் கூட்டம் நடத்தப்பட்டு அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு அரசின் உத்தரவுகள் குறித்தும் அவர்களின் தலையாய பணி என்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் மட்டத்திலும் போதைப்பொருட்கள் ஓழிக்கும் பணியில் முழுமையாக ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். மாவட்டடத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் இது போன்ற ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்படும். போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்களிடம் இருந்து நிறைய தகவல்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் இரவு 10 மணிக்கு மூடவேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவர்கள் சிறைக்கு செல்வார்கள். இவ்வாறு எஸ்பி தெரிவித்தார்.

The post சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: