டெல்லியில் இருந்து புறப்பட தயாரான வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர வழியில் பயணிகள் வெளியேற்றம்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து புறப்பட தயாரான வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உள்ளே இருந்த பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர். தலைநகர் டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 5.35 மணிக்கு வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் வாரணாசி செல்ல தயாராக இருந்த விமானத்தை சோதனையிட்டனர். அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டது. விமானப் பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு உள்ளிட்ட எந்தவொரு சந்தேகப் பொருட்களும் விமானத்தில் இல்லை. அதனால் போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் அவசரகால வழியில் வெளியேற்றப்பட்டனர். எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார். வாரணாசியில் வரும் ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் இருந்து புறப்பட தயாரான வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர வழியில் பயணிகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: