ஊட்டி : ஊட்டி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழகத்தின் முக்கிய மலை வாசஸ்தலமாக உள்ளது.
இங்கு நிலவக்கூடிய குளுகுளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடியவர்களை கவரும் வகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு சவாரி இல்லம்,தொட்டபெட்டா, பைக்காரா மற்றும் இயற்கை சூழ்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி நகரில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றித்திரிகின்றன.
இதனால் அங்கு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. குதிரை, மாடு உள்ளிட்டவை அவ்வப்போது தறிகெட்டு சாலையில் ஓடுகின்றன. இதனால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது.
சில நேரங்களில் மாடுகள் மற்றும் குதிரைகள் பயணியர் நிழற்குடைகளுக்குள் தஞ்சமடைகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் வெளியில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டிய நிலையும் உள்ளது. எனவே ஊட்டி சாலைகளில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை ரோட்டில் திரிய விடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு சொற்பத்தொகை அபராதம் விதிக்கப்படுவதால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே அதிகபட்ச தொகையை அபராதமாக விதிப்பதுடன், கால்நடைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்’’ என்றனர்.
