*போலீசார் விசாரணை
தென்காசி : தென்காசி அருகே திருமணம் ஆகாத விரக்தியில் செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தென்காசி அருகே இலத்தூர் விலக்கு அருகே பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் உள்ள செல்போன் டவர் அருகில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடையநல்லூர் செவல்விளை தெருவை சேர்ந்த மாரிமுத்து – சித்ரா தம்பதி மகன் ஜெயக்குமார் (30) என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், ஜெயக்குமாரின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். ஒரே மகனான இவர் தனது தாய் சித்ராவுடன் குத்துக்கல்வலசை பகுதியில் தற்போது குடியிருந்து வந்துள்ளார். ஜெயக்குமாருக்கு 30 வயது ஆகிவிட்ட நிலையில் சரியான வேலையும் இல்லை. திருமணமும் ஆகவில்லை. இதனால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.
அவர் நேற்று மாலை இலத்தூர் விலக்கு அருகில் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் உள்ள பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. இருப்பினும். அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
