மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்த 7 பேருக்கு நிதியுதவி

*அலுவலர்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுரை

ஊட்டி : கூடலூர் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த 7 நபர்களுக்கு ரூ.2.30 லட்சம் நிதி உதவி கலெக்டர் வழங்கினார்.வாரந்தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இந்த குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்து அதன் மூலம் தீர்வு காண்கின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அனைத்து வட்டங்களிலும் நடந்தது.

இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக அரசுக்கு அளித்தனர். இதன் மூலம் பெரும்பாலான மக்களின் கோரிக்கைகள் அவ்வப்போது தீர்க்கப்பட்டது.

இதனால் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இருந்த போதிலும் பொதுமக்கள் திங்கள் கிழமை நாட்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நேரடியாக மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றும் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, கலைஞர் உரிமைத்தொகை, நடைபாதை வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளிக்க வந்திருந்தனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 166 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி சில கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

மேலும், கூட்டத்தில், முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியிலிருந்து, கூடலூர் பகுதியில் ஏற்பட்ட பல்வேறு சாலை விபத்தில் கொடுங்காயம் அடைந்த 4 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சமும், சிறுகாயம் அடைந்த 3 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரமும் என மொத்தம் 7 நபர்களுக்கு ரூ.2.30 லட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: