காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை

 

சென்னை: காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்துடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த டாஸ்மாக் பணியாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், அந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர், பொதுச்செயலாளர், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் முக்கிய கோரிக்கைகளான, பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்று காலமுறை ஊதியம் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும், ஊதிய உயர்வு வழங்கல், சேவை விதிமுறைகள் தெளிவுபடுத்தல், தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை முறைப்படுத்தல், பணிபுரியும் கடைகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குறிப்பாக, மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடிக்கடி தாக்குதல்களுக்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவி வருவதால், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காவல்துறை உதவி, பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் போன்ற அம்சங்களும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஊழியர்களுக்கான விடுப்பு, மருத்துவ வசதிகள், காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்களையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்திருந்த நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: