செட்டிகுளம் சந்திப்பில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் அத்துமீறும் இருச்சக்கர வாகனங்கள்

*விபத்து அபாயம்

நாகர்கோவில் : செட்டிகுளம் ஜங்சனில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அத்துமீறுவதால், விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை இருவழி பாதையாக மாற்ற மாநகராட்சி நிர்வாகமும், நாகர்கோவில் போக்குவரத்து போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மாநகர பகுதியில் முக்கியமான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு இருபுறமும் அலங்கார நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் இல்லை என்பது பல ஆண்டுகால குறையாக இருந்து வருகிறது.

குறுகலான சாலையால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் திணறி வருகின்றன. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் செட்டிகுளம் ஜங்சன் பகுதியில் ரவுண்டானா அமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி பரீட்சார்த்த முறையில் போக்குவரத்து போலீசார் மாதிரி ரவுண்டானா அமைத்து வாகனங்களை இயக்கி பார்த்தனர்.

ஆனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முன்பு இருந்ததுபோல், தற்போது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேற்கு மாவட்டங்களில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செட்டிகுளம் ஜங்சன் வந்து இடதுபுறம் வழியாக கணேசபுரம் சென்று கோட்டார் வழியாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செட்டிகுளம் ஜங்சனில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் மார்க்கமாக நாகர்கோவில் நகர பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாதை குறுகலான பாதையாகும். இதனால் எதிர்புறம் ஏதாவது வாகனங்கள் வந்துவிட்டால், கடும் நெருக்கடி ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒரு சிலர் வாகனங்களை சீர்படுத்தி விடுகின்றனர். கலெக்டர் அலுவலகம் பகுதி, ராமன்புதூர் மார்கமாக வரும் இருசக்கர வாகனங்கள் கோட்டார் பகுதிக்கு செல்லும் போது, செட்டிகுளம் ஜங்சன் வந்து கணேசபுரம் வழியாக செல்ல வேண்டும். ஆனால் ஒரு சில இருசக்கர வாகன ஓட்டிகள் செட்டிகுளம் ஜங்சனில் இருந்து சென்டர் மீடியனை கடந்து வலதுபுறமாக திரும்பி செட்டிகுளம் சவேரியார் ஆலய சாலைக்கு செல்கின்றனர்.

இதனால் எதிரே வரும் வாகனங்கள் இந்த பைக்குகள் மீது மோதும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ள வழியாக செல்ல வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: