பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 65வது வார்டு கிழக்கு தெரு மைதானம் சந்திப்பு மற்றும் ஜெயராம் நகர் பகுதிகளில் இன்று காலை நடைபெற்ற ‘’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொடங்கப்பட்ட ‘’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ நிகழ்ச்சி 300வது நாளை எட்டியதால் கேக் வெட்டி கொண்டாடினர். இதன்பின்னர் மேயர் பிரியா கூறியதாவது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சரின் துணைவியாரால் இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. 300வது நாளாக இந்த நிகழ்வு இன்று நடைபெற்றதையொட்டி சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
ஒரு வருடம் நடைபெறும் நிலையில், மீதம் உள்ள நாட்களும் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது. பல்வேறு உணவுகள் சூடாகவும் சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக அதனை பெற்று உண்டு வருகிறார்கள்.மெரினா கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆரவற்றோர்களுக்கான இரவுநேர தங்குமிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக மெரினாவில் ஆதரவற்றோர்களுக்காக தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் அதுபோல தங்குமிடம் கட்டப்படும். சென்னை மாநகராட்சி சார்பில், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அந்த செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, சிப் பொருத்தி, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் இன்று முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.
