கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைப்பு

மதுரை: கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த மதுரை நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது. பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சங்கரை தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது காரில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக யூடியூபர் சங்கர், அவரது நண்பர் ராஜரத்தினம் (43), கார் டிரைவர் ராம்பிரபு மற்றும் கஞ்சா சப்ளை செய்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த மகேந்திரனை (24) கைது செய்தனர். மகேந்திரனிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா பறிமுதல் வழக்கில் யூடியூபர் சங்கரை கைது செய்த போலீசார், மதுரை அத்தியாவசிய மற்றும் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கஞ்சா பறிமுதல் வழக்கில் சங்கரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி பழனிசெட்டி போலீசார் மதுரை நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து சங்கரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை முடித்து மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிபதி கூறினார். அதன்படி பரிசோதனைக்குப்பின் சங்கரை பிற்பகலில் மீண்டும் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதியிடம் சங்கர், ‘‘மற்றொரு வழக்கில் அனுமதிக்கப்பட்டதுபோல, 3 மணி நேரத்திற்கு ஒரு முறை என்னை வக்கீல் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார். அரசு வக்கீல் தங்கேஸ்வரன், ‘‘வேறொரு வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கியவாறே இதிலும் கேட்க முடியாது. இரு வழக்குகளும் வெவ்வேறானது. கஞ்சா வழக்கில் இவரோடு மற்றவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. வழக்கறிஞர் வந்தால் விசாரணை பாதிக்கும். எனவே, 7 நாள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, பழனிசெட்டிபட்டி போலீசார், சங்கரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. 22ம் தேதி (நாளை) மதியம் 3 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து பழனிசெட்டி போலீசார் சங்கரை அழைத்து சென்றனர். இந்நிலையில் சங்கருக்கு ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை வரும் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். யூ டியூபர் சங்கர் ஜாமீன் கேட்டு கோவை ஜே.எம்.எண் 4வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி சரவணபாபு ஒத்திவைத்தார்.

* ஆண் போலீசார் பாதுகாப்பு
கடந்த முறை திருச்சியில் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த சங்கரை பெண் போலீசார் அழைத்து சென்றனர். இந்த முறை சங்கரை ஆண் போலீசார் பாதுகாப்புடன் மதுரை நீதிமன்றத்துக்கு கோவையில் இருந்து விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

The post கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: