பாமகவினர் திடீர் சாலை மறியல் பேனர் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து

ஆரணி, மார்ச் 21: ஆரணி அருகே பேனர் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருவதால், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடுதல், அரசியல் கட்சி கொடி மற்றும் கம்பங்களை அகற்றுதல், சுவர் விளம்பரங்களை அழித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் ஊராட்சியில், முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் பிறந்த நாளையொட்டி வன்னியர் சங்கம் சார்பில் பேனர் வைத்திருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று ஆரணி தாலுகா போலீசார் அந்த பேனர்களை கிழித்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமகவினர் ராட்டிணமங்கலம் பகுதியில் உள்ள இரும்பேடு- போளூர் புறவழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.

The post பாமகவினர் திடீர் சாலை மறியல் பேனர் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து appeared first on Dinakaran.

Related Stories: