கார், லோடு ஆட்டோவில் சென்ற 2 பேரிடம் ரூ.1.75 லட்சம் பறிமுதல் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு ஆரணி அருகே அதிகாலையில் உரிய ஆவணமின்றி

ஆரணி, மார்ச் 17: ஆரணி அருகே அதிகாலையில் உரிய ஆவணமின்றி கார், லோடு ஆட்டோவில் சென்ற 2 பேரிடம் ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுமுன்தினம் முதல் அமலில் வந்தது. இதையொட்டி ஆரணி சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு என 18 தணிக்கை குழுக்கள் அமைத்து 24 மணி நேர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு மற்றும் ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் நேற்று அதிகாலையில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு அலுவலரும் வேளாண் உதவி பொறியாளருமான பழனி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் உள்ள வந்தவாசி சாலையில் ஆரணி நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது ரூ.1 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில், அவர் வளையாத்தூர் கிராமத்தை சேர்ந்த புகழ்(40), போர்வெல் உரிமையாளர் என்பதும், புரிசை கிராமத்தில் இருந்து ஆரணி வழியாக வளையாத்தூர் சென்றது தெரியவந்தது. இதேபோல், ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணமின்றி ரூ.75 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் லோடு ஆட்டோ ஓட்டி வந்தவர் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜேஷ்(32), இவர், ஆரணியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் காய்கறி பொருட்களை வாங்கி செல்ல வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாதால் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு அலுவலர் பழனி ரூ.1.75 லட்சத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்டிஓவுமான சிவாவிடம் ஒப்படைத்தார்.

Related Stories: