செய்யாறு, மார்ச் 11: பைனான்சியரை கத்திமுனையில் கடத்தி நகை பறித்த சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா இருங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் முனிகிருஷ்ணன்(35). இவர் செய்யாறில் ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி இரவு தனது நிறுவனத்தை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டபோது தவசி கிராம சுடுகாடு அருகே காரில் வந்த மர்ம கும்பல், முனிகிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்தி கடத்தி சென்று நகை பறித்தது. மேலும் அவரது தாய்க்கு போன்செய்து மிரட்டி 6 சவரன் நகை பறித்தனர். 4 மணிநேரம் காரில் விடிய விடிய சுற்றிய பின்னர் மர்ம கும்பல் முனிகிருஷ்ணனை விடுவித்தது.
இதுகுறித்து முனிகிருஷ்ணன் அனக்காவூர் போலீசில் கடந்த 4ம் தேதி புகார் கொடுத்தார். அதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், பெரணமல்லூர் அடுத்த எஸ் காட்டேரி அருகில் உள்ள எட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் அசோக்குமார்(32) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், அவரது வீட்டின் பின்புறம் பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 19 சவரன் நகை, கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் சேர்ந்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய முனிகிருஷ்ணனின் உறவினரான செய்யாறு தாலுகா திருமணி அடுத்த வெங்கடேசன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் சுந்தரராஜன்(44), எஸ் காட்டேரி பகுதி சேர்ந்த 2 சிறுவர்கள் என 3 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தினர். விசாரணையில், முனிகிருஷ்ணன் சிபாரிசு செய்த நபரிடம் உறவினர் சுந்தரராஜன் சீட்டு பணம் கட்டியதாகவும், அவர் ஏமாற்றியதால் அந்த பணத்தை முனிகிருஷ்ணனிடம் திருப்பி கேட்டுள்ளார்.
அதனை தர மறுத்ததால் சுந்தரராஜன் அவரது நண்பரான அசோக் குமாரிடம், எப்படியாவது முனிகிருஷ்ணனிடம் பணம் வாங்க வேண்டும் என உதவி கேட்டுள்ளார். அவரும் எனக்கு தெரிந்த, வேலூர் அருகே கம்மவான்பேட்டை பகுதி சேர்ந்த அப்பு என்பவரிடம் கூறி பெற்று தருகிறேன் என கூறினார். இதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு முனிகிருஷ்ணனை கடத்தி நகை பறித்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள அப்பு உள்ளிட்ட 5 பேரை ேதடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
