திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை குறைய வாய்ப்பு ஓட்டல் மூடப்படும் ஆபத்து சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடால்

திருவண்ணாமலை, மார்ச் 11: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக, சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலிண்டருக்கு ரூ.60 விலை ஏற்றம் செய்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு செய்ய 25 நாட்கள் அவகாசமும் கட்டாயமாக்கியுள்ளது. மேலும், வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், சமையல் காஸ் சிலிண்டரை மட்டுமே நம்பி செயல்படும் ஓட்டல்கள் தொடர்ந்து செயல்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.

திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரம் என்பதால், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். இங்கு வருகை தரும் பக்தர்கள் முழுமையாக நம்பி இருப்பது இங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களை மட்டுமே. ஆனால், தற்போது திருவண்ணாமலையில் செயல்படும் பெரும்பாலான ஓட்டல்களில், நேற்று முதல் தோசை, பரோட்டா, சப்பாத்தி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலையோர நடைபாதை பகுதிகளில் செயல்படும் சிறு ஒட்டல்களிலும், இட்லி மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வரும் நாட்களில் இதனால் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் வரும் நாட்களில் கடுமையாக தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அவசர அவசரமாக சிலிண்டர் பதிவு செய்து பெற்று வருகின்றனர்.

அதனால், பதிவு செய்த சிலிண்டர்களை வழங்க, சிலிண்டர் விநியோக பணியில் ஊழியர்கள் தொடர்ந்து இரவு வரை ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவண்ணாமலை கிரிவல பாதை ஆசிரமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி அன்னதானம் வழங்குவது வழக்கம். இனிவரும் நாட்களில், பக்தர்கள் மற்றும் சாதுக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அன்னதானம் வழங்கப்படுவதும் பாதிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, போர் விரைவில் முடிவுக்கு வந்து சிலிண்டர் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்குமா என பொதுமக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

Related Stories: