கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது: சிஎம்டிஏ தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்படுகின்றது. இந்த பேருந்து முனையத்திற்கும் நகரத்தின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பு சேவை வழங்குவதற்காக சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் 498 வழக்கமான பேருந்துகள் தவிர, நெரிசல் மிகுந்த நேரங்களில் 200 சிறப்பு பேருந்துகளும் மற்றும் 4,651 நடைகள் இருவழி புறப்பாடுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து முனையத்திற்கும் மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கும் இடையே கட்டணமில்லாத 4 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வண்டலூர் கேட் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் இடையே 2 மினி பேருந்துகள் கட்டண சேவை பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த முனையத்திலிருந்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர், மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க. நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி மற்றும் பூந்தமல்லி, சிறுசேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த முனையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை கடந்த 30ம் தேதி வரை 642 முன்பதிவுகளும், வாடகை கார்கள் 510 முன்பதிவுகளும், ஓலா, ஊபர் மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட ஆட்டோக்களுக்கு பிரத்யேக நிறுத்துமிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, காத்திருப்பு கூடங்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பின்வரும் திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ.20 கோடி ரயில்வே துறைக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த பேருந்து முனைய பிரதான கட்டிடத்திற்கும் மாநகர் பேருந்து நிலையத்திற்கும் பயணிகள் வசதிக்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி இம்மாதம் முடிவடையும். வண்டலூர் மற்றும் அயனஞ்சேரி சந்திப்பு மேம்படுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 3 சாலை விரிவாக்க பணிகள் முடிந்துள்ளது. புதிய காவல் நிலையம் பிப்.5ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மழைநீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

 

The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது: சிஎம்டிஏ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: