ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு பிரபல ரவுடி கருக்கா வினோத் மீது 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை

பூந்தமல்லி, ஜன.21: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், பிரபல ரவுடி கருக்கா வினோத் மீது 680 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்தாண்டு அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதுதொடர்பாக பிரபல ரவுடியான சரித்திர பதிவேடு குற்றவாளி நந்தனம் பகுதியை சேர்ந்த கருக்கா வினோத் (42) என்பவரை கிண்டி போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற காரணத்திற்காக இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், கருக்கா வினோத் மீது பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் 680 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கை நேற்று முன்தினம் மாலை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, வெடி பொருட்கள் மூலம் வெடிவிபத்து ஏற்படுத்தியது (பிரிவு 436), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது (பிரிவு 353), குற்றம் கருதி மிரட்டல் (பிரிவு 506-2), வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது மேலும் வெடிபொருள் தடை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை பதிவுசெய்ய கூறிய ஐபிசி 124 பிரிவு இந்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் சேர்க்காத இந்த பிரிவை தேசிய புலனாய்வு பிரிவு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நாளையுடன் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு 90 நாட்களாகிறது. அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்பதற்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கருக்கா வினோத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு பிரபல ரவுடி கருக்கா வினோத் மீது 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: