சிங்கம்புணரியில் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்குமிடம், அன்னதானம்: கார்த்திக் சிதம்பரம் எம்பி பங்கேற்பு

 

சிங்கம்புணரி, ஜன. 19: சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோவில் பகுதியில் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் அன்னதானம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவிற்காக காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சேவுகப் பெருமாள் கோவில் முன்பு பக்தர்கள் தங்கும் வகையில் தகர செட்டுகள் மற்றும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எம்பி கார்த்திக் சிதம்பரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை துவக்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் சிவகங்கை தொகுதி உட்பட 39 இடங்களை இந்தியா கூட்டணி வெல்லும். தமிழகத்திற்கு அடிக்கடி பிரதமர் வருவதால் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் அடிப்படை அரசியல் தத்துவம் மாறிவிடாது.

திருவள்ளுவருக்கு மதசாயம் பூசுவதில் எனக்கு ஈடுபாடு கிடையாது. மாநில உரிமைகளை மதிக்கின்ற, தமிழ் உணர்வு, இந்தியை திணிக்காத, மதசார்பற்ற அரசாங்கம் வேண்டும் என மக்கள் எதிர்பார்கிறார்கள் ’’ என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ அருணகிரி, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி, மாநில பேச்சாளர் சிங்கை தருமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், நகர் தலைவர் தாயுமானவன், முன்னாள் மத்திய கயிறு வாரிய உறுப்பினர் குழந்தை வேலன், முன்னாள் கவுன்சிலர் இளம்பரிதி கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post சிங்கம்புணரியில் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்குமிடம், அன்னதானம்: கார்த்திக் சிதம்பரம் எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: