லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது: திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது நாளாக

திருவண்ணாமலை, மே 24: திருவண்ணாமலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக கூட்டம் அலைமோதியது.
நினைக்க முத்தித்தரும் ஆன்மிக திருநகரான திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.16 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 7.51 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் மாலை தொடங்கி, இரவு முழுவதும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதிகாலை முதல் காலை 11 மணி வரை பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. அதன்பிறகு, படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கியது.

தொடர்ந்து நேற்றும், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அஷ்ட லிங்க சன்னதிகளை தரிசனம் செய்தபடி ஓம் நமசிவாய எனும் சிவ மந்திரத்தை உள்ளத்தில் ஓதியபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடன கலைஞரான பக்தர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு தலையில் தீச்சட்டி ஏந்தி பரதநாட்டியம் ஆடியபடி 14 கிமீ தூரம் கிரிவலம் சென்று வழிப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் தரிசனத்துக்காக கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தேரடி வீதி வரை சுமார் ஒரு கி.மீ தூரம் தரிசன வரிசை நீண்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக அமைத்திருந்த நிழற்பந்தல், தரை விரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை, கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் மீனாட்சிசுந்தரம், டிவிஎஸ் ராஜாராம், கோமதிகுணசேகரன், சினம் பெருமாள், கோயில் மேலாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர். மேலும், தரிசனம் செய்த பக்தர்களுக்கு குளிர்ந்த மோர் வழங்கப்பட்டது. நாள் தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ், லட்டு வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் விரைவு தரிசனத்துக்காக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 1.40 லட்சம் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தொடர்ந்து இரண்டு நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த காலங்களில், பவுர்ணமியின் இரண்டாம் நாளன்று சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் வெளியூர் செல்லும் பக்தர்கள் தவிப்படைவார்கள். ஆனால், நேற்று தொடர்ந்து பக்தர்களின் தேவைக்குரிய வழித்தடங்களில் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. மேலும், காலை 11 மணி வரை தற்காலிக பஸ் நிலையங்கள் இயங்கின. எனவே, பக்தர்கள் சிரமமின்றி ஊர் திரும்ப முடிந்தது.

அதேபோல், சென்னை பீச் ஸ்ேடஷனில் இருந்து வேலூர் வழியாக இயக்கப்படும் ரயிலில் நேற்று கூட்டம் அலைமோதியது. மேலும், விழுப்புரம் வழித்தடத்தில் நேற்று பவுர்ணமி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நேற்று காலை 9.15 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு காலை 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைந்தது. பின்னர், பகல் 12..40 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைந்தது. இந்த சிறப்பு ரயில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.கோடை விடுமுறை ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதாலும், வெயிலின் தாக்கம் குறைந்திருப்பதாலும் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பவுர்ணமிக்காக பக்தர்களின் தரிசனத்துக்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து மேற்கொள்ள கோயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

The post லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது: திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது நாளாக appeared first on Dinakaran.

Related Stories: