திருவொற்றியூரில் கோலாகலம் வடிவுடையம்மன் கோயிலில் ஆதிபுரீஸ்வரர் கவச தரிசனம்: 3 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் மூலவர் ஆதிபுரீஸ்வரர் மீது அணிவித்திருக்கும் தங்கமுலாம் பூசப்பட்ட நாக கவசம் ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபம் அன்று முதல் 3 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு கவசமின்றி காட்சி அளிப்பார். இந்தாண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஷேச பூஜைகள், சிறப்பு அபிஷேகத்திற்கு பின் கவசம் திறக்கப்பட்டு, மூலவர் ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாம்பிராணி, தைலாபிஷேகம் நடைபெற்றது. இதில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் 3 நாட்களும் பக்தர்கள் குடை பிடித்தபடி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதில் தெலங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, நேதாஜி கணேசன், திமுக மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், திரைப்பட நடிகர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்தநிலையில், கடைசி நாளான நேற்றிரவு வரை ஆதிபுரீஸ்வரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களின் தரிசனத்திற்கு பின் சிறப்பு பூஜைகள் செய்து இரவு 11 மணிக்கு மீண்டும் ஆதிபுரீஸ்வரர் கவசம் சாத்தப்பட்டது. 3 நாட்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதற்காக 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post திருவொற்றியூரில் கோலாகலம் வடிவுடையம்மன் கோயிலில் ஆதிபுரீஸ்வரர் கவச தரிசனம்: 3 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Related Stories: