விசாரணைக்கு பின் ஊர் பெரியவர்களிடம் போலீசார் கூறுகையில், பட்டப்பகலில் திருடு நடந்துள்ளதால், உள்ளூர்காரர்கள்தான் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து கிராம பெரியவர்கள், ‘திருட்டு தொடர்பாக உள்ளூர்க்காரர்களை கைது செய்தால் ஊர் பெயருக்கு களங்கம் ஏற்படும். எங்கள் கிராமத்தில் திருடு போன பொருட்களை மீட்க வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி மீட்டுக் கொள்கிறோம்’ என போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பெரியபொக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பேப்பர் கவர் கொடுத்தனர். அப்போது, ‘ஊர் பள்ளியில் உள்ள அறையில் அண்டாவை வைத்து அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விடுவோம். நகை, பணத்தை எடுத்தவர்கள் கவருக்குள் வைத்து அண்டாவில் போட்டு விடுங்கள்’ என தெருக்கள்தோறும் தண்டோரா போட்டு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஊரில் உள்ள அரசுப்பள்ளி அறையில், 2 அண்டாக்களை ஊர்ப்பெரியவர்கள் வைத்தனர். பின்னர் ஊரில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் மீண்டும் மின்விளக்குகள் போடப்பட்டு, ஊர்ப்பெரியவர்கள், பள்ளியில் அண்டாவில் போட்டிருந்த கவர்களை எடுத்து பிரித்துப் பார்த்தனர். இதில், 23 பவுன் நகையை யாரோ கவரில் வைத்து போட்டிருந்தனர். பணம் எதுவும் வைக்கவில்லை. இதையடுத்து ஊர்ப்பெரியவர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் நகைகளை சிந்துபட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ராகவனிடம் ஒப்படைத்தனர். விசாரணையின்றி சப்தமில்லாமல் நகையை மீட்ட ஊர்ப்பெரியவர்களை, போலீசார் பாராட்டினர்.
இதுதொடர்பாக கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி, கந்தசாமி ஆகியோர் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் பொருட்கள் திருடு போனால், இந்த நடைமுறையை பின்பற்றித்தான் மீட்போம். பெரிய பொருட்கள் என்றால் வீடுதோறும் பைகள் கொடுப்போம். மோதிரம் போன்ற சிறிய பொருட்கள் என்றால் வீடுதோறும் சாணி உருண்டை கொடுப்போம். இந்த நடைமுறையை கையாண்டு திருடுபோன 26 பவுன் நகையில், 23 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. இரவு(நேற்று) மீண்டும் அண்டாக்களை வைத்து கவர் கொடுப்போம். பாக்கியுள்ள நகை மற்றும் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
The post ஊர்ல இருக்க லைட்ட எல்லாம் அணைச்சிடுறோம்… ‘நகை, பணம் எடுத்தவங்க அண்டாவுல போட்டுருங்க…’ போலீஸ் நடவடிக்கையை தடுக்க திருடு போன 23 பவுனை விநோதமாக மீட்ட பெரியவர்கள் appeared first on Dinakaran.
