மாணவர்களை மையப்படுத்தி புதிய கல்வி கொள்கை: பல்கலைக்கழக மானியக்குழு செயலர் பேட்டி

கோவை: மாணவர்களை மையப்படுத்தி புதிய கல்வி கொள்கை அமைக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியக்குழு செயலர் கூறினார். கோவை விமான நிலையத்தில் பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மானிஷ் ஜோஷி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், உயர்கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதுள்ள கல்வி முறையில் ஒரு பட்டப்படிப்பிற்கு ஏற்ற வகையில், புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள் இந்த கல்வியோடு, வேறு பாடங்களையும் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்த விருப்பத்தை நிறைவேற்ற புதிய கல்விக் கொள்கை உதவுகிறது. மாணவர்களை மையப்படுத்தி இந்த கொள்கை அமைக்கப்பட்டு உள்ளது. பொருளாதாரம், இயற்பியல், பொறியியல் வேதியியல், இசை, யோகா என பல்வேறு பாடங்களில் புலமை பெற்றவர்கள் உள்ளனர். இந்த கல்வி புலமையை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய கல்வி திட்டம் வழி வகுக்கிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், புதிய கல்வி திட்டம் பற்றி பிற மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இவர்கள் புதிய கல்வி திட்ட சாரதிகள் என அழைக்கப்படுவர். பாலக்காட்டில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற ஒரு கருத்தரங்கு நடந்தது. புதிய கல்வி கொள்கை திட்டம் பற்றி விளக்கம் தரப்பட்டது. மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் இருந்தாலும், தங்களது தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்பு, ஒவ்வொரு கல்வி முறைக்கும், பட்ட மேற்படிப்புக்கும் பல்வேறு கொள்கைகள் இருந்தன. புதிய கல்வி திட்டத்தில் இவை அனைத்தும் ஒங்கிணைக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

முதல் முறையாக கேஜி வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை ஒரே கொள்கை பின்பற்றப்படுகிறது. புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் எவ்வித தடையும் இல்லை.  காலத்துக்கு ஏற்ற இந்த கல்வி முறையை பின்பற்றுவோர், விரைவில் முன்னேற்றம் காண முடியும். இதை பின்பற்றாவிட்டால், பின்தங்கிய நிலையில்தான் நீடிக்க முடியும். மாணவர்களின் எதிர்பார்ப்பை புதிய கல்வி கொள்கை நிறைவேற்றும். ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை அணுகும் முறையிலும் வேறுபாடுகள் இருக்கும். தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் இருக்கும். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த முறையில், எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்ற முடியும். நேரடி பயிற்சிகளையும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாணவர்களை மையப்படுத்தி புதிய கல்வி கொள்கை: பல்கலைக்கழக மானியக்குழு செயலர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: