கோலாகலமாக நடைபெற்ற மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடை முழுக்கு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கங்கை நதி உள்ளிட்ட ஜீவ நதிகள் மாசடைந்தன. இதனால் ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசியில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக புராணம் கூறுகிறது.

எனவே ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறையில் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே ஐப்பசி மாத கடைசி நாளில் காவிரி துலாக்கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இது கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத துலா உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி மயிலாடுதுறை பகுதியில் உள்ள சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். இந்த தீர்த்தவாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடுவர். இந்தநிலையில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா மாத உற்சவ தீர்த்தவாரி கடந்த 18ம் தேதி தொடங்கியது. இன்று மதியம் தீர்த்தவாரி நடந்தது.

முன்னதாக திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அயபாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான படித்துறை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசி விஸ்வநாதர், வதானேஸ்வரர் கோயிலில் உள்ள ஞானாம்பிகை உடனான வதாரண்யேஸ்வரர், கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமி சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் காவிரியில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அந்த நேரத்தில் துலாக்கட்ட காவிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். எனினும் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் துலா கட்டத்தில் நீராடி வருகிறார்கள்.

The post கோலாகலமாக நடைபெற்ற மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: