மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு

சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (14.11.2023) காலை முதல் பரவலாக பருவமழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சியின் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மழைநீர் எங்கும் தேங்காத அளவிற்கு களப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்கள் பிரதிநிதிகள், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் (பணிகள்), துணை ஆணையாளர் (கல்வி), வட்டார துணை ஆணையாளர்கள் ஆகியோரும் களப்பணிகளைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகளை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (14.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட டெமல்லஸ் சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தின் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியினையும், அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகாலில் மழைநீர் சீராக வெளியேறுவதையும், ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் மேம்பாலத்தின் அருகில் நீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் வெளியேற்றும் பணியினையும், இராயபுரம் மண்டலம், வார்டு-63, இராயப்பேட்டை ஜி.பி.சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதையும் மாண்புமிகு மேயர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள் இராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட ஆதித்தனார் சாலையில் வேலாயுதம் தெரு மற்றும் அய்யாசாமி தெரு சந்திப்பில் கடந்த ஆண்டில் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட களப்பணி நடவடிக்கைகளை இன்று (14.11.2023) நேரில் பார்வையிட்டு, வண்டல் வடிகட்டித் தொட்டியில் மழைநீர் தேங்காமல் செல்வதை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், வார்டு-63க்குட்பட்ட பாரதி சாலை, அமீர் மஹால் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட களப்பணி நடவடிக்கைகளையும் மதிப்பிற்குரிய துணை மேயர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக்குழுத் தலைவர் திரு.பி.ஸ்ரீராமுலு அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு. சிவ ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: