மாமல்லபுரத்தில் தீபாவளி கொண்டாடிய வெளிநாட்டு பயணிகள்: பட்டாசு வெடித்து உற்சாகம்

சென்னை: மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அப்படி, வருபவர்கள் இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், வெளிநாட்டு பயணிகள் நிறைந்து சுற்றுலா தலம் களைகட்டியது.

மேலும், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏராளமான பயணிகள் மாமல்லபுரம் ஓட்டல்களில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து தங்கி, பல்லவர்கள் கை வண்ணத்தில் செதுக்கப்பட்ட புராதன சின்னங்களை கண்டு ரசித்து வருகின்றனர். அப்போது, உள்ளூர் மக்கள் தெருக்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை கண்ட நெதர்லாந்து, பிரான்ஸ் பயணிகள் இங்குள்ள ஒரு கடையில் பட்டாசு வாங்கி, தாங்கள் தங்கி இருந்த ஓட்டல் மற்றும் வெண்புருஷம் மீனவர் பகுதியில் மக்களோடு மக்களாக பட்டாசு வெடித்து தீபாவளியை பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், தீபாவளிக்கு மறுநாளான நேற்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க நேற்று உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் குடும்பத்தோடு வந்திருந்தனர். மாமல்லபுரம் முக்கிய வீதிகளான கடற்கரை சாலை, ஒத்த வாடை தெரு, ஐந்து ரதம் சாலை, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, தென் மாட வீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும், பயணிகள் புராதன சின்னங்களை கண்டு ரசித்து குடும்பம், குடும்பமாக செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நகருக்குள் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்ததாலும், சாலையை ஆக்கிரமித்து நின்றதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில மணி நேரம் வெளியேற முடியாமல் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்தன. குறிப்பாக, தென் மாட வீதியில் உள்ள வீடுகளுக்கு முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால், வீட்டில் இருந்து வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். நேற்று, காலையில் இருந்து மதியம் வரை குறைந்த பயணிகளே காணப்பட்டனர். மதியம், 2 மணிக்கு மேல் ஏராளமான வாகனங்களில் பயணிகள் வந்து குவிந்தனர். கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது.

The post மாமல்லபுரத்தில் தீபாவளி கொண்டாடிய வெளிநாட்டு பயணிகள்: பட்டாசு வெடித்து உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: